இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக்கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும். பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.