சோமாலியாவில் பேருந்தில் குண்டு வெடித்து கால்பந்து வீரர்கள் பலியானதற்கு அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரைக் கொன்று குவித்தும் வருகின்றனர்.

சோமாலியாவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் மாகாணமாக ஜுபாலந்த் பகுதியில் வாக்குப்பதிவு இந்த வாரம் தொடங்கியது. தேர்தலை இடையூறு செய்வோம் என்று அல் ஷபாப் குழுவினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டில் கிளப் அணிகளுக்காக விளையாடும் கால்பந்து வீரர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் கால்பந்து வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரத்தில் உள்ள மைதானத்திற்கு கிளப் போட்டியில் பங்கேற்க சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.