இலங்கை தனது மக்களுக்கு செலுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்தால்,தமது தடுப்பூசி குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தக்கூடாது அது குறித்து கருத்து தெரிவிக்ககூடாது என சினோவாக் நிறுவனம் கடும்  நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தம்முடனான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விலை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டாலோ அல்லது அது குறித்து பொதுவெளியில் பேசினாலோ இலங்கை அரசாங்கத்துடனான உடன்படிக்கை நிறுத்தப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சீன நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ள தனியார் நிறுவனத்தின் தலைவர் வி நடராஜா என்பவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமனவிற்கு கடந்த 13ம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீனாவிடமிருந்து தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்படும் விலைகள் குறித்து சர்ச்சை நிலவுகின்ற சூழலிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியை பங்களாதேசிற்கு வழங்கியதை விட அதிகரித்த விலையில் இலங்கைக்கு சீனா வழங்கியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.