கனடாவில் Saskatoon பகுதியை சேர்ந்த நபர் தமது வழக்கமான நடைப்பயிற்சியின் போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தாடியும் வெட்டப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

Saskatoon பகுதியை சேர்ந்த முஹம்மது காஷிஃப் என்பவரே மர்ம நபர்களால் தாக்குதலுக்கு இலக்கானவர். வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில், முஹம்மது காஷிஃப் வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது திடீரென்று அவர் அருகாமையில் நிறுத்தப்பட்ட வாகனம் ஒன்றில் இருந்து வெளிவந்த இருவர் முஹம்மது காஷிஃப் மீது தரக்குறைவாக பேசியுள்ளனர்.

மேலும், நாங்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறோம், ஏன் நீங்கள் இனி இங்கே வசிக்கிறீர்கள், உங்கள் நாடுகளுக்கே திரும்பி செல்லுங்கள் என மிரட்டியுள்ளனர்.

மட்டுமின்றி முஹம்மது காஷிஃப்பின் முதுகில் கத்தியால் பல முறை தாக்கியுள்ளதுடன், அவரது தாடியையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.

கத்தியால் தாக்கியதை தடுத்ததால் காயம் பட்ட கையில் மொத்தம் 19 தையல்கள் போடப்பட்டுள்ளது. ஒரு லொறி சாரதியே பொலிசாருக்கு தகவல் அளித்து தமக்கு உதவியதாக முஹம்மது காஷிஃப் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.