சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் கடந்த 18ஆம் திகதி தொடங்கியது.

இதில் முதல் 4 நாட்களில் 2 நாள் ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. 

நேற்றையதினம் நடந்த உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றில் நியூசிலாந்து அணிக்கு 53 ஓவர்களில் 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்சில் 45.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தடம் பதித்தது. கேப்டன் வில்லியம்சன் 52 ரன்களுடனும் (89 பந்து, 8 பவுண்டரி), ராஸ் டெய்லர் 47ரன்களுடனும் (100 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து அணி உலக அளவிலான போட்டியில் வெற்றிக் கோப்பையை வசப்படுத்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் இறுதிசுற்று வரை வந்து தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணியின் நீண்டகால ஏக்கத்தை இந்த அபார வெற்றி தணித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

வாகை சூடிய நியூசிலாந்து அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¾ கோடியும், 2ஆவது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.