இந்தியா: தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலின் கதாநாயகனாக உதயநிதி இருக்கிறார், என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் போவதில்லை. இந்த தேர்தலில் தமிழகத்தின் கதாநாயகனாக உதயநிதி இருக்கிறார், கடந்த 15 தினங்களாக, நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். கடுமையாக உழைக்கும் அவரை வரும் காலத்தில் திமுக தொண்டர்கள் உட்பட மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நமது நாட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டுகளைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும். அதிமுக ஏற்கெனவே, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என பல துண்டுகளாக பிரிந்துள்ளது. வருங்காலத்தில் அது தங்கமணி, வேலுமணியாகக் கூட பிரிய வாய்ப்பு உள்ளது.

ராகுல் பிரதமராக வந்தாலும் சரி, ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் சரி எங்களைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்று தான். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சொல்லி வந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ள திட்டங்கள், காமராஜர் ஆட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் தான் இருக்கின்றன, என்றார்.