இந்தியா: தமிழ்நாடு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட குரும்பூர், அழகப்பபுரம், நாலுமாவடி ராஜபதி, நாலுமாவடி, தென்திருப்பேரை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம். பாஜக ஆட்சியில் எல்லோருடைய உரிமைகளும் பறிக்கப்பட்டன. பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அடிப்படை விலை கொடுக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நிதி கொடுக்கவில்லை, நிவாரணமும் கொடுக்கவில்லை.

தமிழகத்தில் மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்யக்கூடிய ஆட்சி உள்ளது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு முகாம் நடத்தப்பட்டு உரிமைத் தொகை தரப்படும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு இண்டியா கூட்டணி வெற்றிபெற வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.