இந்தியா: தமிழ்நாடு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில், திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதாரங்களை திமுக எடுத்துள்ளது. அத்தனை அவதாரங்களையும் தவிடு பொடியாக்கிவிட்டோம். தெய்வ சக்தி உள்ள அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்கள் தானாக அழிந்து போய்விடுவர்.

நான் ஒரு விவசாயி. தற்போதும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகள் ஏற்றம் பெறுவதே என் லட்சியம். அதிமுக ஆட்சியில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அத்திக்கடவு திட்டத்தில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டனர்.

காவிரிப் பிரச்சினைக்காக அதிமுக எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் திமுக எம்.பி.க்கள் எந்ததிட்டத்துக்காகவும் குரல் கொடுக்கவில்லை. காவிரி ஆணையத்தின் 29-வது கூட்டத்தில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது என்று கர்நாடகம் அறிவித்துவிட்டது. இதுவரை முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதில் அறிக்கை வெளியிடவில்லை. தமிழக விவசாயிகள் மீது முதல்வருக்கு அக்கறையில்லை.

தேர்தல் வாக்குறுதிபடி மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்று 27 மாதங்களாக நாங்கள் குரல் கொடுத்த பின்னர்,வேறு வழியில்லாமல் உரிமைதொகையை வழங்கினர்.

அனைத்துத் துறையினரும் தற்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு துன்பமும், வேதனையும்தான் மிச்சம். அதிமுக ஆட்சியில் பல தேசிய விருதுகளைப் பெற்றோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் நிலவுகிறது. முதல்வர் ஸ்டாலின், பிரதமர் கனவில் இருக்கிறார். அதற்கு வழியில்லை. இவ்வாறு அவர் பேசினார்.