திருவள்ளுவர் சிலை அமைக்க கொரிய ஜனாதிபதியின் சமூக ஒருங்கிணைப்பு செயலாளரிடம் கோரிக்கை வைத்த கொரிய தமிழ்ச் சங்கம்
கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2 ஆம் திகதி 2024 அன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான உரையாடலை ஊக்குவிக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வானது, நாட்டின் பிற மாகாணங்களை இணைக்கும் நடு மாகாணமான சுன்ச்சியாங்புக்தோவில் உள்ள சொங்ஜு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்குள்ள கொங்தோக் மாவட்ட அலுவலகத்தினர் அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து உதவினர். இந்நிகழ்விற்கு கொரியா தமிழ் சங்கத்தின் மூத்த உறுப்பினரான முனைவர் தெ.சு. பிரபாகரன் மூலமாக கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு அழைப்பு தரப்பட்டது.சங்கத்தின் சார்பில் தலைவர் அரவிந்த ராஜா,மேனாள் தலைவர் முனைவர் இராமசுந்தரம், செயலாளர் சரவண்ணன்,துணைப்பொருளாளர் ஜெரோம் பீட்டர், இணைச்செயலார்கள் பாரதி,சம்பத், மேகலா உட்பட 15 பேர் இந்நகழ்வில் பங்குப்பெற்றனர்.

கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஷ்யா, சீனா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாட்டை சேர்ந்த மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு கொரிய ஜனாதிபதி மண்புமிகு யூன் சோக் யோல், சுன்ச்சியாங்புக்தோ மாகாண ஆளுநர் கிம் தே கொம், மாகாண கல்வி மேலாண்அலுவலர் யூன் ஜியன் யோங், செஜோங் நகர மேயர் சோய் மின் கொ, தேஜோன் நகர மேலாண்அலுவலர் சொல் தொங் கொ ஆகியோர் பூங்கொத்துக்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

நிகழ்விற்கு தலைமை வகித்த கொரிய ஜனாதிபதியின் சமூக இணைப்பிற்கான உதவி செயலாளர் உயர்திரு சுங் சாம் யங் கலந்துகொண்ட பல்லின மக்களின் குறைகள் மற்றும் வேண்டுகோள்களை கேட்டறிந்தார். பல்லின சமூகத்தின் குடும்ப மேம்பாடு, வேலைவாய்ப்பு, வதிவிட உரிமைகள். மருத்துவ உதவி, தேவையான இடங்களில் பன்மொழி தகவல்தொடர்பை உறுதி செய்தல் உள்ளிட்ட வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டது.

கொரிய அரசில் பதிவு செய்யப்பட்டு பல்லின சமூகத்தினர் நடுவே தொண்டாற்றும் அமைப்பு ஏணிகிற வகையில் சங்கத்தின் ஜனாதிபதியின் சமூக ஒன்றிணைப்புக்கான செயலாளரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் பின்வருமாறு:

பல்லின குழந்தைகளுக்கான உரையாடல் இடைவெளியை அதிகரித்து மனநலன் காக்கும் திட்டங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த அரசு உதவிட வேண்டும். பல்லின சமூகத்தினரின் நிகழ்வுகளுக்கு தேவைப்படும் அரங்கம், விளையாட்டு திடல் உள்ளிட்டவற்றை பெறுவதில் இருக்கும் இடையூறுகளை களைதல்.

பல்லின சமூகத்தினரின் தொண்டு அமைப்புகளுக்கு பொருளுதவி மற்றும் ஆவணம் சார்ந்த மொழிபெயர்ப்பு பணிகளை எளிமைப்படுத்துதல், அடிப்படை மாத சம்பளத்தை முப்பது இலட்சம் கொரிய வோன் என்கிற அளவிற்கு உயர்த்துதல், உலகப்பொதுமறை தந்த தத்துவஞானியான அய்யன் திருவள்ளுவரின் சிலையை சொங்ஜு நகரில் அமைக்க உதவுதல். இதுகாறும் கொரிய அரசிடம் நேரடியாக வேண்டுகோள் வைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. நமது சங்கத்தின் அறிமுகம் மற்றும் தேவைகளை, சங்கத்தின் இணைச்செயலாளர் பாரதி அவர்கள் கொரிய மொழியில் முன்வைத்தார்.