இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு பொதுச் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். ஆனால் ஜனாதிபதி எமது ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட மாட்டார். அவர் கட்சி பேதமற்ற பொது வேட்பாளராக களமிறங்குவார். பொது சின்னத்தில் போட்டியிடுவார்.

மக்களுக்கு இன்னும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால் ஜனாதிபதி நாட்டை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் பெறுவதற்கு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. எனவே ஜனாதிபதி நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார். 

ஆனால் பொதுவான சின்னம் ஒன்றில் தான் போட்டியிடுவார். யானை சின்னத்தில் போட்டியிடும் சாத்தியம் மிக குறைவு. சகலரும் இணைந்து பணியாற்றக் கூடிய வகையிலான ஒரு சின்னம் தெரிவு செய்யப்படும். அப்போது அங்கு எந்த விதமான முரண்பாடுகளும் இருக்காது. இதற்குப் பின்னர் இந்த நாட்டில் ஒரு தனி கட்சியினால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.