இலங்கை
இலங்கையர்களுக்கு வரி இலக்கம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு 16 பில்லியன் செலவில் சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்பு முறைமையை முறையாக செயற்படாத காரணத்தினால் இந்த தாமதம் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இதனை கட்டாயமாக்குவதற்கு வருவாய்த் திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போதைய நிலவரத்தினால் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வரை அது தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இந்திய அரசின் தொழில்நுட்ப ஆதரவுடன் வரி இலக்கம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்பு முறைமையில் ஏற்பட்டுள்ள பிழைகளினால் வரி இலக்கம் கோரி விண்ணப்பித்த 109,000 பேருக்கு வரி இலக்கங்கள் வழங்குவதில் இன்னமும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல்வரி இலக்கத்தை கட்டாயமாக்க அரசாங்கம் முதலில் திட்டமிட்டு, பின்னர் பெப்ரவரி மாதம் முதல் இருந்து அமல்படுத்த திட்டமிடப்பட்டது. எனினும், ராமிஸ் அமைப்பில் உள்ள குளறுபடிகள் காரணமாக, டின் எண் கட்டாயமாக்குவதை ஏப்ரல் வரை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்தது.
இதற்கிடையில், வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, அமைப்பிற்கு வெளியே மற்றொரு மென்பொருள் அமைப்பை நிறுவி, வரி இலக்கத்தை விரைவாக வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்க இந்திய அரசின் தொழில்நுட்ப ஆதரவில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நோக்கத்திற்காக இந்திய அரசாாங்கமும் தனது ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதிக செலவின்றி மென்பொருள் அமைப்பை தயாரிப்பது தொடர்பாக இந்த நாட்களில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. வரி நிர்வாகத்தை மேலும் திறம்படச் செய்யும் வகையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருவாய் நிர்வாக மேலாண்மை தகவல் அமைப்ப முறையை அறிமுகப்படுத்தியது.