சீயான் விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணி முதன் முறையாக இணைந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம், அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்தது. பட்ஜெட் பிரச்சினையில் தொடங்கி கொரோனா ஊரடங்கு என துருவ நட்சத்திரம் மொத்தமாக கிடைப்பில் கிடந்தது.

இந்தப் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என நினைத்த கெளதம் மேனன், ஃபைனான்ஸ் பிரச்சினையை தீர்ப்பதற்காக நடிப்பில் கவனம் செலுத்தினார். இதனையடுத்து துருவ நட்சத்திரம் படத்தை நவம்பர் 24ம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்திருந்தார். பல வாரங்களுக்கு முன்பே ரிலீஸ் திகதியை அறிவித்த கெளதம் மேனன், அடுத்தடுத்து ப்ரொமோஷன் வேலைகளையும் தொடங்கினார்.

ஆனால், கடைசி நேரத்தில் துருவ நட்சத்திரம் ரிலீஸில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் 24ம் திகதி ரிலீஸில் இருந்து பின் வாங்கியது துருவ நட்சத்திரம். சிம்பு நடிப்பில் 'சூப்பர் ஸ்டார்' என்ற படத்தை இயக்கவிருந்தார் கெளதம் மேனன். இந்தப் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால், 'சூப்பர் ஸ்டார்' படத்தை முடிக்காத கெளதம் மேனன், 2.40 கோடி பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால், துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கு தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் கெளதம் மேனன் பணம் கொடுப்பதாக உறுதி கொடுத்திருந்தார். இதனையடுத்து துருவ நட்சத்திரம் படத்தை வரும் 30ம் திகதி (நாளை) ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்தது. ஆனால், தற்போது அதிலும் பிரச்சினை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, துருவ நட்சத்திரம் ரிலீஸ் திகதி நவம்பர் 30ல் இருந்து அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம். அதாவது டிசம்பர் 8ம் திகதி தான் துருவ நட்சத்திரம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதுவும் இன்னும் உறுதியாக முடிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.