சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாக கூறிய திரிஷா, இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் சினிமா வட்டத்தை தாண்டி அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தனர்.

அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தொடர் புகார்களையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகின. எனவே ஒரு வழியாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த மன்சூர் அலிகான், “நான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரவில்லை. மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால் அந்த வார்த்தை மன்னித்துவிடு என புரிந்துக்கொள்ளப்பட்டது. எனவே பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என நானும் அமைதியாக இருந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.