விஜய்யின் தளபதி 68 பட ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
லியோ போல் தளபதி 68 படமும் மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியில் உருவாகி வருகிறது. இதனால், இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், கண்டிப்பாக சிறப்பான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்கு மங்காத்தா, சிம்புவுக்கு மாநாடு போல, விஜய்க்கு தளபதி 68-ஐ கொடுக்க வேண்டும் என வெங்கட் பிரபுவும் தீயாக வேலை செய்து வருகிறாராம்.
சென்னையில் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங், தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்றது. அதன்பின் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினார் வெங்கட் பிரபு. இதனையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தளபதி 68 டீம் ரெடியாகிவிட்டதாம். அதன்படி, தளபதி 68 ஷூட்டிங் சென்னை, தாய்லாந்தை தொடர்ந்து துருக்கியில் நடைபெறவுள்ளது. இந்த அப்டேட்டை இயக்குநர் வெங்கட் பிரபுவே கொடுத்துள்ளார்.
அதாவது தளபதி 68 படப்பிடிப்புக்காக துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகருக்குச் சென்றுள்ளார் வெங்கட் பிரபு. முதல் ஆளாக அவர் மட்டும் சென்றுள்ளதாகவும், அடுத்து விஜய் உட்பட மற்ற நட்சத்திரங்கள் செல்லவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் உள்ள வெங்கட் பிரபு, அங்கு டீ குடிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.