நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது விடுதலை படம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது.

விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கேரக்டர் குறைவான காட்சிகளையே கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் இந்த கேரக்டர் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரின் பிளாஷ்பேக் காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இதற்காக இருவருக்கும் de Aging தொழில்நுட்பத்தில் வயதை குறைத்துக் காட்ட வெற்றிமாறன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் 30 நாட்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மஞ்சு வாரியர் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இடம்பெறாத பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்டவர்களும் தற்போது இரண்டாவது பாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் வெற்றிமாறன் இணையவுள்ளார்.