இலங்கை
இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (1) இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் கோபால் பாக்லே ஆகியோர் வரவேற்றனர்.
3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நாளை 2ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
இதேவேளை, நாளையதினம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் “இணைப்பை மேம்படுத்துதல் : செழுமைக்கான கூட்டு” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய - இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டிலும் முக்கிய உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜானதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் ஸ்ரீ தலதா மாளிகைக்கும், அனுராதபுரத்தில் உள்ள மஹா போதிக்கும் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
மேலும் தனது விஜயத்தின் போது லங்கா ஐ.ஓ.சி.யின் எண்ணெய் குதங்களையும் , யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தையும் , யாழ் பொது நூலகத்தையும் நிர்மலா சீதாராமன் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.