ரஷியாவில் செயல்பட்டு வரும் தனியார் ராணுவ அமைப்பு வாக்னர் குழு. இதன் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின். இவர் கடந்த மாதம் அதிபர் புதின் அரசுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதன் மூலம் உலகின் கவனத்துக்கு வந்தார்.

இந்த சூழலில் கடந்த புதன்கிழமை ரஷியா தலைநகர் மாஸ்கோ அருகே நடந்த விமான விபத்தில் யெவ்ஜெனி பிரிகோஜின் பலியானதாக தகவல்கள் வெளியாகின. வாக்னர் குழுவை சேர்ந்த 10 பேர் சென்ற விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிகட்டைகளாகிவிட்டன.

விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலில் யெவ்ஜெனி பிரிகோஜின் பெயரும் இருப்பதால் அவரும் விபத்தில் பலியானதாக நம்பப்படுகிறது.

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இதனிடையே யெவ்ஜெனி பிரிகோஜின் புதின் அரசுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க விபத்து நடந்த பகுதியில் இருக்கும் உள்ளூர் மக்கள் விமானம் தரையில் விழுவதற்கு முன்பு குண்டு வெடித்ததுபோல சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதேபோல் விமானம் வெடிக்க வைக்கப்பட்டது தங்களது முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் கூறியுள்ளது. திட்டவட்டமாக மறுப்பு இதற்கு முன்னரும் புதின் எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பலர் வெளிப்படையான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் பலர் கொலை முயற்சிக்கு ஆளாகி கடுமையான நோய் வாய்ப்பட்டுள்ளனர். இதனால் யெவ்ஜெனி பிரிகோஜின் விவகாரத்தில் பல்வேறு தரப்பில் எழுப்பப்படும் சந்தேகங்கள் உண்மையாக இருக்கலாம் என பரவலாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் யெவ்ஜெனி பிரிகோஜின் பலியானதாக கூறப்படும் விமான விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை புதின் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

புதின் இந்த கொலையை திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், பிரிகோஜின் மிகவும் திறமையானவர். வலிமையான நபர். அவர் ஆக்கபூர்வமான மனிதர். அவர் சில தவறுகளை செய்து இருக்கிறார். இருந்தாலும் அவர் சிறப்பான பிஸ்னஸ் மேன்.

அவரை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர் சில தவறுகளை செய்து இருந்தாலும் சரியான முடிவுகளையே அவர் எடுத்து இருக்கிறார் என்று புதின் கூறி உள்ளார்.