இந்தியா: தமிழ்நாடு

தனது உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தாம் நலமுடன் இருப்பதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு...

2005 ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை "வறுமை ஒழிப்பு தினமாக" கடைப்பிடித்து வருகிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நமது கழக கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நலத்திட்டங்களை கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்புதினத்தில் செய்யவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் 25.08.2023 காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.