ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விஜய் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

2003ம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் தான் முதலும் கடைசியுமாக விஜய் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைந்திருந்தது. அந்த படம் வெற்றிபெறாத நிலையில், அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா உடன் விஜய் கூட்டணி அமைக்கவே இல்லை.

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா உடன் கூட்டணி அமைத்துள்ளார் விஜய்.

அதன் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைக்க மாட்டார் என்றும் அனிருத் தான் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், வெங்கட் பிரபு எப்போதுமே தனது சகோதரரான யுவன் சங்கர் ராஜாவை எந்த காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தளபதி 68 படத்தில் அனிருத் இல்லை, யுவன் சங்கர் ராஜா தான் இசை என முதல் அறிவிப்பிலேயே அனைத்து வதந்திகளுக்கும் நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

மங்காத்தா, மாநாடு என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தளபதி 68 படத்திலும் தனது பிஜிஎம் மற்றும் பாடல்களால் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.