இந்தியா: தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதிப்புக்குள்ளாகி பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட தமிழக அரசு விஷசாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

அந்த வகையில், விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் மற்றும் டாஸ்மாக் மதுபான விற்பனை கட்டுப்பாடின்றி நடப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தந்த மாவட்ட மகளிர் அணி தலைவி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். விஷ சாராயத்தை தடை செய்ய தவறிய அரசு பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாஜக குழுவினர் நாளை ஆளுநரை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாஜக குழுவினர் ஆளுநரை நாளை சந்திக்க இருக்கிறார்கள் என தெரிவித்தார்.