தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், "புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு கிடைத்து இருந்தால் அவரை விட சூப்பராக நடித்து இருப்பேன்'' என்று பேசியதாக சர்ச்சை கிளம்பியது.

இதனையடுத்து ராஷ்மிகாவை குறை சொல்லி அவமதித்து விட்டதாக அவரது ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை விமர்சித்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில், "எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும், எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்" என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

'புஷ்பா' படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை. ராஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.