இந்தியா: தமிழ்நாடு

கோயம்பேடு அருகே வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதாக வெளிவந்த செய்திக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் டாஸ்மாக் தானியங்கி இயந்திரம், மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட தமிழக அரசுக்கு இல்லையா எனக் கேள்வி எழுப்பினார் ஈபிஎஸ்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது தொடர்பில் கூறுகையில்...

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த அறிவிப்புமின்றி 96 கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், மூடப்பட உள்ள 500 மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக்கில் ரூ.5, ரூ.10 என கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக நடந்து வருகிறது.

டாஸ்மாக் கடை வருமானத்தில் தான் தமிழ்நாடு அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை. வணிக வளாகங்களில் மதுபான கடைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். தற்போது தானியங்கி மதுபான இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கடையானது 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது.

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் வழங்கும் வசதி எந்த இடத்திலும் இல்லை. வணிக வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எலைட் மதுபான கடைக்குள் மட்டுமே இயந்திரம் உள்ளது. வணிக வளாகத்தில் மதுபான தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது. எலைட் மதுபான கடையில் விற்பனையாளர் முன்னிலையில் மட்டுமே மது தரும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதி ஏற்கனவே அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.

எலைட் கடையில் உள்ள தானியங்கி மதுபான இயந்திரம் 24 மணிநேரமும் செயல்படவில்லை. ஏடிஎம் இயந்திரத்தோடு மதுபான தானியங்கி இயந்திரத்தை ஒப்பிடுவது தவறு. அதிமுக ஆட்சியில் மதுபான வருமானத்தை பயன்படுத்தவில்லையா? டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சி நடத்தியது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.