உலகின் மிக பெரிய நாடான ரஷ்யாவில் ஆய்வாளர்கள் சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளாகப் புதைந்திருந்த ஒரு நாய்க் குட்டியை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் சைபீரியாவில் இந்த நாய்க்குட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் 18,000 ஆண்டுகள் நாயின் உடல் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

அதன் உடலை ஆய்வாளர்கள் லவ் டேலன் மற்றும் டேவ் ஸ்டாண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இருப்பினும், அது இளம் நாயா அல்லது ஓநாயா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இந்த பழமையான நாயின் படங்கள் இணையத்திலும் வெளியானது. பலரும் எப்படி நாய் இவ்வளவு தூரம் பாதுகாக்கப்பட்ட நிலையில் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

விலா எலும்புகள், முழுமையாக உரோமம் மற்றும் பற்கள் என அனைத்துமே அப்படியே இருந்துள்ளது. அது நாயா அல்லது ஓநாயா என்பதில் குழப்பம் இருந்ததால் அதற்கு 'டோகோர்' என்று ஆய்வாளர்கள் பெயரிட்டனர்.

ஓநாய்களில் இருந்து நாய்கள் பிரிந்தது அனைவருக்கும் தெரியும். மரபணு ரீதியான ஆய்வில் முதற்கட்ட முடிவுகளால் அது நாயா அல்லது ஓநாயா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே சுமார் 4 ஆண்டு ஆய்வுக்குப் பிறகு அது என்ன என்பதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

அதாவது டோகர் ஒரு நாய் அல்ல. இது ஆரம்பக்கால நாய்களுடன் கூட நெருங்கிய தொடர்பில்லாத ஓநாய் வகையைச் சேர்ந்தது ஆகும்.

நாயின் மரபணுவை 72 பழங்கால ஓநாய்களின் மரபணுக்களுடன் ஆய்வு செய்தனர். வரலாற்றில் நாய் வளர்ப்பில் மனிதர்கள் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை நடத்தினர். இதன் மூலமே அந்த உயிரினம் நாய் இல்லை ஓநாய் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து லண்டன் ஆய்வாளர் ஆண்டர்ஸ் பெர்க்ஸ்ட்ராம் கூறுகையில், "பனி யுகத்தில் வளர்க்கப்பட்ட முதல் விலங்கு நாய்கள் தான். ஆனால், காட்டு விலங்காக இருந்த ஓநாயை எப்படி நாய்களாக மாற்றி வளர்த்தார்கள் என்பது இன்னுமே மர்மமாகவே இருக்கிறது. இது உலகில் எங்கு நடந்தது என்பது நமக்குத் தெரியாது.

நவீன ஓநாய்களின் மரபணுக்கள் காலப்போக்கில் நிறைய மாறிவிட்டதால், ஓநாய்கள் நாய்களாக மாறிய சரியான நேரத்தைத் தெளிவாகக் கண்டறிவது கடினமாக இருந்து வருகிறது. அதேநேரம் மேற்கு யூரேசியாவிலிருந்து வந்த பழங்கால ஓநாய்களை விட, கிழக்கு யூரேசியாவிலிருந்து வரும் பழங்கால ஓநாய்களுடன் நாய்கள் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.