இந்தியா: தமிழ்நாடு

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அப்போது அண்ணாமலை, பேசியதாவது...

முறைகேடு பட்டியல் ஒன்றுடன் முடிவடையாது. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சி எல்லாம் அமைந்து இருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழல்களும் 2024 தேர்தலுக்கு முன்பு கொண்டுவரப்போகிறேன். ஊழலை எதிர்க்கிறோம் என்றால் மொத்தமாகத்தான் எதிர்க்கவேண்டும். பாதியை மட்டும் எதிர்க்கக்கூடாது. ஊழல் செய்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்போம். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என பேசியிருந்தார்.

அண்ணாமலை அதிமுக ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் இது தொடர்பாக கூறியதாவது...

நேற்று அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் நல்ல விஷயம்தான். நாங்களே இதைத்தான் சொல்லி வருகிறோம். அண்ணாமலை வெளியிட்டதோடு நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கையாக மத்திய விசரணை அமைப்புகள் மூலமாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால் அவரை சிறந்தவர் எனலாம். ஆனால் அவர் அப்படி செய்வாரா? அதுதான் கேள்வியாக உள்ளது. ன்

அதிமுக என்று அண்ணாமலை சொல்லவில்லை. பத்திரிகையாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அண்ணாமலை 2006-11 ஆம் ஆட்சியை சொல்லியிருப்பார். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. சிபிஐ பற்றி கவலை இல்லை. உளவுத்துறை, அமலாக்கத்துறை பற்றி கவலை இல்லை.வருமான வரித்துறை பற்றி கவலை இல்லை..

முந்தைய ஆட்சி என்றால் 2006-11 என்று கூட சொல்லலாம். 1996-2001 என்று சொல்லியிருக்கலாம். அண்ணாமலை அதிமுக என்று சொல்லட்டும் அடுத்தது உங்கள் கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்கிறேன்.

அண்ணாமலையை பொறுத்தவரை இப்போது நான் சேலஞ்ச் பண்ணி சொல்கிறேன். அதிமுக ஆட்சி காலத்தில் கூட சொத்துப் பட்டியலை வெளியிடுவோம் என அண்ணாமலை சொல்லட்டும் அதுக்கப்புறம் நான் விளக்கம் கொடுக்கிறேன்.

அண்ணாமலையை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. எந்த பட்டியல் வேண்டும் என்றாலும் வெளியிடட்டும். எல்லாம் சட்டப்படி இருக்கிறது. நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக என்று அவர் சொல்லட்டும் அடுத்து எங்கள் பதில் எப்படி வரும் என்று பாருங்கள்.

அதிமுக என்று சொத்துப்பட்டியலை வெளியிடுங்கள் அதற்கு பிறகு எங்கள் ரியாக்‌ஷனை நாங்கள் தர்றோம். அண்ணாமலை அப்படி வெளியிட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்கெல்லாம் பயப்படும் ஆள் நாங்கள் இல்லை. மறைமுக பூச்சாண்டி, மிரட்டல் விடுக்கிற வேலை எல்லாம் எங்கள் கிட்ட பலிக்காது. பாஜக உட்பட அனைவரையும் பார்த்துதான் சொல்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.