இந்தியா: தமிழ்நாடு

பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் நெறியாளர்,‌ அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்கு பின், நீதிமன்றமே அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டிருக்கிறது.இதை இன்னும் எளிமையாக முடித்திருக்கலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? என கேட்டார்.அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில், இகோ பிரச்சனை தான் காரணம்.ஓபிஎஸ்ஸை அவருடன் இருப்பவர்கள் தவறாக வழிநடத்தி விட்டார்கள்.

எடப்பாடியை ஒற்றை தலைமையாக்க வேண்டும் என்று ஓபிஎஸ் இடம் போய் மேல்மட்ட தலைவர்கள் எல்லோருமே பேசினார்கள். ஆனால் அவர் வராததால் தான் பிரச்சனை ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது அதிமுக வலிமையாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு சுக்ர திசை அடிக்கிறது. நாளைக்கு தேர்தல் வைத்தாலும், தமிழக முதலமைச்சராக எடப்பாடி வந்துவிடுவார். அந்த அளவிற்கு இருக்கிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விருப்பப்பட்டால் மதுரையில் நிறுத்தி நானே ஜெயிக்க வைப்பேன் என்றார்.

மேலும் ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் வந்தால் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ், எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்வார். மன்னிப்பு கடிதம் எல்லாம் தேவையில்லை.ஈபிஎஸ்ஐ பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். அப்படி ஒன்று நடந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முடிவெடுப்பார்கள். ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.