இந்தியா: தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நீண்ட காலமாக நிலுவையில் இருந்து நிலையில், அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் திருப்பி அனுப்பினார்.இதையடுத்து மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்காக ஸ்டாலின் தலைமையிலான அரசு அனுப்பி வைத்தது, அதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக ஆளுநரை எடப்பாடியார் தலைமையில் சந்திக்கும் போது அழுத்தம் கொடுத்து இருந்தோம். அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஏற்று ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

மேலும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருப்பதை வரவேற்றுள்ள திமுக எம்பி வில்சன் கூறும்போது, ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறும்போது, இதுபோல் மசோதாக்களை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. அதையும் மீறி அவர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ஆளுநர் அடிபணிந்துள்ளார். முன்னரே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என தெரிவித்தார்.

இதனிடையே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டு மனம் திருந்தி ஆளுநர் நடவடிக்கை எடுத்ததாக பார்க்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஆளுனர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆளுனரின் முடிவு மிகவும் தாமதமானது என்றாலும் கூட, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது! ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? என்பதையே ஆளுனர் மீண்டும், மீண்டும் வினாவாக எழுப்பி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க.வின் நிலைப்பாடு தான் வெற்றி பெற்றிருக்கிறது!" என்று கூறியுள்ளார்.