இந்தியா: தமிழ்நாடு

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல், தான தர்மங்களை அதிகரித்து அவர்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம்.

இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 18 ஆண்டுகளாக நோன்பு நோற்பதை கடைபிடித்து வந்த நிலையில், 19-வது ஆண்டாக இந்தாண்டும் நோன்பு வைத்து வருகிறார்.

மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவன் நோன்பு நோற்கும் நாட்களில் சென்னையில் உள்ள அபு பேலஸ் ஹோட்டலில் தான் சஹர் சாப்பாடு (அதிகாலை உணவு) உட்கொள்வார்.

அதேபோல் தன்னுடன் சேர்ந்து மாலையில் நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும், தமிழறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும் திருமா அழைப்பது வழக்கம்.

இதனிடையே திருமாவளவன் நேற்று முன்தினம் முதல் நாளாக நோன்பு வைத்த நிலையில் சஹர் உணவை அபு பேலஸ் ஹோட்டலில் சாப்பிட்டார்.

நோன்பு வைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி சென்ற திருமாவளவன் அங்கே விசிக மாநாட்டில் கலந்துகொண்டதோடு 2வது நாள் நோன்புக்கான சஹர் உணவை அங்கேயே சாப்பிட்டார்.