உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார்.

அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ட்விட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார்.

நீல நிற குருவிக்கு பதில் நாய் லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது.

Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. ட்விட்டர் லோகோவை மாற்றி எலான் மஸ்க் மீம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் கார் ஓட்டி வரும் நாயை போலீஸ் நிறுத்தி ஐடி கேட்கிறார்கள். அதுவும் ஐடியை கொடுக்கிறது. ஆனால், அதில் நீலப்பறவையின் போட்டோ இருக்கிறது. அதற்கு அது என்னுடைய பழைய படம் என்று அந்த நாய் பதில் அளிப்பது போல் உள்ளது.

மேலும், இன்னொரு பதிவையும் பகிர்ந்துள்ள அவர் இந்த முடிவு ஒரு ட்விட்டர் பயனரின் விருப்பப்படி எடுக்கப்பட்டுள்ளது என்ற வகையில் கூறியுள்ளார். அதில் நீண்ட நாட்களுக்கு முன்பு Chairman என்ற ட்விட்டர் பயனரோடு எலான் மஸ்க் ட்விட்டரில் உரையாடும் போது நீலப்பறவை லோகோவை மாற்றி விட்டு doge லோகோவை வைக்குமாறு அந்த பயனர் கோரிக்கை வைக்கிறார். தற்போது அந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்து சத்தியத்தை காப்பாற்றிவிட்டேன் என்றும் பதிவு செய்துள்ளார் எலான் மஸ்க்.

ட்விட்டர் செயலியின் லோகோ திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.