இந்தியா: தமிழ்நாடு

மதுரையில் நீதிமன்ற கட்டிட அடிக்கல் விழா உள்ளிட்ட இன்னும் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து கார் ஏற வந்த அவருக்கு அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் புத்தகங்களையும், பொன்னாடைகளையும் பரிசாக அளித்தனர்.

பொன்னாடைகளை பரிசாக அளிப்பதற்கு பதில் புத்தகங்களை கொடுங்கள் என ஒரு முறை, இரு முறை அல்ல பல முறை அறிவுறுத்தியும் அதை மட்டும் யாரும் கேட்பதாக தெரியவில்லை. ஆடம்பர வரவேற்புகளை தவிர்க்க வேண்டும், விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என மிகக் கடுமையான முறையில் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பால், இந்த முறை ஆரவாரமின்றி முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்தார் அமைச்சர் மூர்த்தி.

அதேபோல் பெரியளவில் கட்சியினரை கொண்டு வந்து விமான நிலையத்தில் குவிக்கவில்லை.

அப்படியிருந்தும் மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்திய மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் அவரவராக திரளான எண்ணிக்கையில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வந்திருந்தனர். தன்னை வரவேற்க வந்தவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிய பின்னரே கார் ஏறினார் முதல்வர் ஸ்டாலின்.

அதேபோல் ஸ்டாலினை வரவேற்று மதுரை மாநகரில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதும் இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளது.