இந்தியா: தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் வடுவூரில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைக்கச் சென்றார்.

இதனிடையே இந்தியாவிலேயே விளையாட்டுக்கு பெயர் போன ஊரான வடுவூரில் மிகவும் உற்சாகமாக பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள் விளையாட்டரங்கம் மேம்பாட்டு பணிக்காக திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி கொடுத்ததுடன் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஒரு செக்கையும் வைத்தார்.

அதாவது உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா தனது சொந்த நிதியிலிருந்து உள் விளையாட்டரங்க மேம்பாட்டு பணிக்காக தாராளமாக நிதி வழங்குவார் எனக் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் செங்கல்லை தூக்கி காட்டி, எய்ம்ஸ் கட்டுமானப் பணியின் நிலை குறித்து பேசிய நிகழ்வை அப்படியே தத்ரூபமாக சிலை வடித்து அதனை பரிசாக கொடுத்தார் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. 

அந்த சிலையில் உதயநிதி ஸ்டாலின் கட்டிய வாட்ச் கூட அப்படியே இடம்பெற்றிருந்தது. இதனை எதிர்பார்க்காத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூரிப்போடு அதனை வாங்கிக் கொண்டார்.

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் உதயநிதி ஸ்டாலினை 'இளந்தலைவர்' என்ற புதிய அடைமொழியுடன் அந்த சிலையில் குறிப்பிட்டிருப்பது தான். இதுவரை சின்னவர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளந்தலைவர் என்ற புதிய அடைமொழியை சூட்டியுள்ளார்.