கடந்த 9ம் திகதி ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றினார்.

இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த மொத்த உரை அவை குறிப்பில் இடம்பெற்றது.

தமிழ்நாடு கூட்டத்தொடர் இன்று நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் ஆளுநர் உரை மீதான விவாத கேள்விகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தினார்.

இதன்போது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்...

சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கவனிக்கும் அரசு இது. அனைவரும் சமம் என்ற கொள்கையை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி இது.

திராவிட ஆட்சி வீரத்துடன், விவேகத்துடன் நடக்கிறது என்பதை இந்தியாவே இப்போது உணர்ந்துவிட்டது.

தமிழ்நாட்டின் மேன்மைக்காக கடந்த 20 மாதங்களில் கடுமையாக உழைத்து இருக்கிறோம். இதையே கருத்தில் கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறோம்.

திராவிட மாடல் ஆட்சியானது செயல்பட்டு வருகிறது என்பதை விட வெற்றிபெற்று வருகிறது என்பதுதான் சரியாக இருக்கும்.

தொழில் வளர்ச்சியில் எல்லோரும் இருக்க வேண்டும், எல்லோரும் சமமாக வளர வேண்டும் என்று திட்டமிட்டோம். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் கண்ட கனவு. அவர்களின் கொள்கையின் கீழ் நாம் செய்யும் ஆட்சி என்பது ஏறுமுகத்தில் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

கடந்த 9 ஆம் திகதி ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் தொடக்க உரையை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள், எதிர்கால திட்டங்கள் பற்றி அவர் பேசினார். அன்று நடந்ததை பற்றி பேசி அரசியலாக்க விரும்பவில்லை. அதே சமயம் மக்கள் எங்களுக்கு வழங்கிய உரிமைகளை காக்க அன்று நான் அவையில் பேசினேன். ஆட்சியின் மாண்பை காக்க நான் என் சக்தி மீறி செயல்படுவேன் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆயிரம் கைகள் மறைத்து இருந்தாலும் ஆதவன் மறைவது இல்லை.

தமிழ் காக்க, தமிழ் மண் காக்க, தமிழர் நலன் காக்க , தமிழர் மானம் காக்க என்றும் உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நான்.

மக்களின் மானத்தை காக்க என்றும் உழைக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மெய்ப்பித்து காட்டும் நாளாக அன்றைய தினம் இருந்தது என்பதை தவிர வேறொன்றும் இல்லை.

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் இந்த மாமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றிய ஆளுநர் ஆர். என் ரவிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.