சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அந்த ஓட்டலுக்குள் தனது விலை உயர்ந்த காரை விட்டு மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவரை தடுக்க பலர் முயற்சி செய்தும் அந்த நபர் தனது செயலை கைவிடவில்லை.

சேதத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் சென்(28) என்றும், அவர் அந்த ஓட்டலில் தங்கி இருந்த போது அவருடைய லேப்டாப் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் அவர் புகார் அளித்த போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சென், தனது விலை உயர்ந்த சொகுசு காரை அந்த ஓட்டலின் வரவேற்பு பகுதிக்குள் வேகமாக கொண்டு வந்து மோதியுள்ளார்.

அதோடு நிறுத்தாமல் அங்கிருந்த அலங்கார பொருட்கள், மேஜைகள், கண்ணாடிகள் உள்ளிட்டவற்றின் மீது காரை மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இறுதியாக ஒரு தூணில் மோதி கார் நின்ற போது, கார் கண்ணாடியை உடைத்து அந்த நபரை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.