சீனாவில் கொரோனா தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகம் எடுத்துள்ளது.

குறிப்பாக அங்கு உள்ள ஒரு மாகாணத்தில் 90 சதவீத மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சீனாவில் கொரோனா மருந்துகள் காலியாகிவிட்டன.

இதனால் கொரோனா நோயாளிகளுக்கு வெறும் இருமல் மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா மருந்துகள் தீர்ந்து விட்டதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா மருந்துகளான பிரிமோவிர், பக்ஸிஸ்டா, மொல்நுவன்ட், மோல்நட்ரிஸ் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.

இந்த மருந்துகள் உடனடியாக காய்ச்சல், தலைவலியை குறைத்துவிடுவதால் சீன மக்கள் இந்த மருந்துகளை வாங்க போட்டிப்போட்டு வருகிறார்கள்.

ஆனால், மேற்குறிப்பிட்ட இந்திய தயாரிப்பு மருந்துகளுக்கு சீனாவில் அனுமதி இல்லாததால் அவை கள்ளச்சந்தைகளில் அதிக அளவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

இந்நிலையில் கள்ளச்சந்தைகளில் இந்திய மருந்துகள் விற்பனையை சீன அரசு இரும்புக்கரம் கொண்டு தடுத்து வருகிறது.

இதனால் இந்திய மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய கொரோனா மருந்துகளை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்க மக்கள் தயாராக உள்ளனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பல வியாபாரிகள் இந்திய மருந்துகளின் பெயரில் போலி மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது தெரியாத அப்பாவி மக்களும் அவற்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த சூழலில், போலி இந்திய கொரோனா மருந்துகள் விற்பனை அதிகரித்திருப்பதாக மக்களுக்கு சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், என்னென்ன மருந்துகளை வியாபாரிகள் அதில் சேர்க்கிறார்கள் என்பது தெரியாததால் இதை பயன்படுத்தும் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.