சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர் (32).

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்றார்.

மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் அங்கேயே ஒரு ரெஸ்டாரண்ட்டை தொடங்கினார்.

அதன் பின்னர் 'கார்க்கிவ் தமிழ் சங்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி நடத்தினார்.

பின்னர் அவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு 'மாறன்' எனப் பெயரிட்ட பாலா சங்கர் தனது சங்கத்தின் பெயரை 'மாறன் அறக்கட்டளை' என மாற்றினார்.

அந்த அறக்கட்டளை மூலம் உதவி கேட்டு வரும் தமிழர்களுக்கும், உக்ரைனில் உள்ள ஏழைகளுக்கும் அவர் உதவி வந்தார்.

இந்த சமயத்தில்தான் கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கும், உக்ரைனைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடுகளுக்கும் சென்றனர்.

இந்தியர்களை மீட்பதற்காகவே சிறப்பு விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், பாலா சங்கரோ தனது சகோதரர்களையும், மனைவி, குழந்தைகளையும் மட்டும் தாய்நாட்டுக்கு அனுப்பினார்.

அவர்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர்களுடன் செல்ல பாலா சங்கர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, உக்ரைன் தங்கள் ராணுவத்தில் இணைந்து போர்புரிய விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

அப்போது முதல் ஆளாக விண்ணப்பித்தார் பாலா சங்கர். அவரது விண்ணப்பத்தினை பரிசீலித்த உக்ரைன் அரசு அவருக்கு ராணுவத்தினருக்கு தேவையான உணவுப்பொருட்களையும், குடிநீரையும் விநியோகிக்க அனுமதி அளித்தது.

அந்தப் பணியை இரவு பகல் பாராமல் செய்தார் பாலா சங்கர். அவரது கடுமையான உழைப்பையும், உக்ரைனுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற அவரது முனைப்பையும் கவனித்த உக்ரைன் அரசு, ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை அண்டை நாடுகளிடம் இருந்து வாங்கி வரும் பணியில் அவரை அமர்த்தியது.

இதையடுத்து, தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து உக்ரைன் நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகிறார் பாலா சங்கர்.

இதுகுறித்து பாலா சங்கர் கூறியதாவது...

இந்தியா எனது தாய்நாடு. அதே சமயத்தில் என்னை வாழ வைத்த நாடு உக்ரைன்.

எனக்கும், என் மனைவி, மகனுக்கும் உணவு கொடுத்த நாடு உக்ரைன். அப்படி இருக்கும்போது அந்த நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்படி என்னால் அப்படியே விட்டுவிட்டு வர முடியும்? எனது குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பிவிட்டேன். நான் உக்ரைனை விட்டு செல்ல மாட்டேன்.

கடைசி மூச்சு இருக்கும் வரை உக்ரைனுக்காக போராடுவேன். தினம் தினம் மரணத்தை நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ரஷ்ய உளவாளிகள் ஆபத்தானவர்கள். அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டுதான் ஆயுதங்களை எடுத்து வருகிறேன்.

உயிர் எப்போது போகும் எனத் தெரியவில்லை அதை பற்றிய பயமும் இல்லை என கூறினார் பாலா சங்கர்.