இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வருகிறது.

அதனால்தான் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.

கோதுமை இல்லாமல் அவர்களின் அன்றாட வாழ்வு நகராது. இந்நிலையில் கோதுமை மாவின் விலை உயர்ந்துவிட்டதால் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.

கராச்சியில் ஒருகிலோ கோதுமை மாவு ரூபாய் 140 முதல் 160 வரை விற்கப்படுகிறதாம்.

இந்நிலையில் அங்கு கோதுமை பஞ்சம் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.

பலுசிஸ்தான் உணவு அமைச்சர் ஜமரக் அச்சக்சாய், கோதுமை இருப்பு காலியாகிவிட்டது என்றும், பலுசிஸ்தானுக்கு உடனடியாக 400,000 மூட்டை கோதுமை தேவை, இல்லாவிட்டால் நிலைமை சீரியஸாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் மானிய விலையில் கிடைக்கும் மாவு மூட்டைகளை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கால்கடுக்கில் நிற்கிறார்கள்.

குறிப்பாக, கைபர் பன்துன்க்வா, சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களின் பல பகுதிகளிலும் கோதுமை மாவை, பெறுவதற்காக மக்கள் முண்டியடித்தும் நெரிசலில் சிக்கி கொள்ளும் நிலைமையும் வந்துவிட்டது.

இத்தகைய சூழலில் 10 கிலோ மாவு பாக்கெட்டை பெறுவற்காக பாகிஸ்தானியர்கள் எப்படியெல்லாம் போராடுகிறார்கள் என்பதை சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில் மினி லாரிகள், வேன்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளன.

அவைகளில்தான் கோதுமை மாவு பாக்கெட்கள் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

இவைகளை பெறுவதற்காக மக்கள் திரண்டு வருகிறார்கள்.

ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாக்கப்பட்ட மினி லாரிகள் மற்றும் வேன்களில் மாவை விநியோகிக்கிறார்கள்.

அந்த மாவை பெறுவதற்காக வாகனங்களை சுற்றி மக்கள் கூடிவிடுவதால், கடும் நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது.

பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடி சண்டை வரை போய்விடுவதை அந்த வீடியோவில் காணக்கூடியதாக உள்ளது.