கிண்ணியா தள வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் நேற்று  வைத்தியசாலை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன் குறைபாடுகள் பற்றியும் நேரடியாக ஆராயப்பட்டது.

கிண்ணியா வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறை,வைத்தியசாலையை தரம் உயர்த்துதல், வைத்தியசாலை காணி பற்றாக்குறை தொடர்பாகவும் காணியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன்  மிக விரைவில் அக்காணியை  பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் கிண்ணியா வைத்தியசாலையை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வரைபு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் போது கிண்ணியா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து  பாராளுமன்றத்தில் உரையாற்றியதை தொடர்ந்து  வைத்தியசலைக்கு நேரடியாக விஜயம் செய்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும்,சமூக வைத்திய அதிகாரியுமான டொக்டர்  அருள்குமரன், உதவி வைத்தியட்சகர்  ஏ.எம்.எம்.ஜிப்ரி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.