இலங்கை

இலங்கையில் புதிய யோசனை ஒன்றின்படி, பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும் தேசிய மகளிர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை வெளியிடப்படவுள்ளது.

இந்த சட்டமூலமானது, பெண்களின் முன்னேற்றம் மற்றும் வலுவூட்டலுக்கான தேசிய கொள்கையை வகுப்பதன் மூலம் பல்வேறு துறைகளிலும் பாலின சமத்துவக் கொள்கைகளை நிறுவ முயல்கிறது.

அதன்படி, ஏழு பேர் கொண்ட ஆணைக்குழு அமைக்கப்பட உள்ளது. அதில் குறைந்தபட்சம் ஐந்து பேர் பெண்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு பேரவை மற்றும் நாடாளுமன்ற மகளிர் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர்.

பெண்களின் உரிமை மீறல் அல்லது உடனடி மீறல் குறித்து விசாரிக்கவும், விசாரணை செய்யவும், பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெறவும் இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

கூடுதலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் எந்தவொரு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள பெண்களின் உரிமை மீறல் அல்லது உடனடி மீறல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஆணையம் தலையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.