இந்தியா: தமிழ்நாடு

அண்ணாமலை நம்பிக்கை கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக சார்பில் ஏற்கெனவே 195 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இரண்டாவது பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

மோடி சிலிண்டர் திட்டம் குறித்து பேசும் முன் முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என கூறிய வாக்குறுதி என்ன ஆனது என்று கூற வேண்டும். மத்திய அரசு கடந்த 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.

கர்நாடகா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்ட மொத்த வளர்ச்சியில் பின்தங்கியுள்ளன. போதை பொருள் கடத்தல் வழக்கில் தமிழக அரசு, டிஜிபி-யை முன்னிலைப்படுத்தி வருகிறது. உதயநிதி தான் பதிவிட்ட டிவீட்-டை ஏன் அழித்து விட்டார்.

முதல்வர் இதுவரை ஏன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு உதவும் கட்சிகளை தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கோவை வளர்ச்சிக்கு எதிராக மாநில அரசும் கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்படும் நிலையில் மத்திய அரசு கோவை வளர்ச்சிக்கு இணைப்பு பாலமாக பணியாற்றி வருகிறது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். இதை நான் இன்றே எழுதி கொடுக்க தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.