இலங்கை

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழு கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளையும் நிறைவேற்றமுடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தனியார் கடனாளிகளுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் அவர்களின் கடன் மறுசீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த வகையில், சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் அதே வேளையில், தனியார் கடன் வழங்குநர்களுடன் இது போன்ற விவாதங்கள் நடத்தப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயரும், அடுத்த மீளாய்வுக்கு முன்னதாக பத்திரதாரர்கள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கி உட்பட தனது வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்படிக்கையை செய்து கொள்ளும் என்று தமது நிதியம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அரசாங்கம் தம்முடன் கடன் மறுசீரமைப்பில் தீவிரமாக ஈடுபடாவிட்டால், அடுத்த சர்வதேச நாணய நிதிய மதிப்பாய்வு மற்றும் இலங்கைக்கான தவணையைத் தடுக்க தனியார் கடன் வழங்குநர்கள் "தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யலாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்நாட்டு அரசியல் மற்றும் வரவிருக்கும் தேர்தல்கள் காரணமாக தனியார் கடன் வழங்குநர்களை கையாள்வதில் இலங்கை மிகவும் மெதுவான வேகத்தில் நகர்வதாக சந்தேகிக்கப்படுகிறது.