இந்தியா: தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதனிடையே அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்சிற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறார்.

இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலையில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம். வரும் 11ம் திகதி ஜே பி நட்டாவை சந்திக்கும் திட்டம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புகளின்படி அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலையில் ஓபிஎஸ் இருக்கையில், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.