தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாகவே சினிமா, அரசியல் என எதிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்த விஜயகாந்த் உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து 29ம் திகதி இறுதி ஊர்வலம் முடிந்ததும் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆனால், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதேநேரம் சூர்யா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்ததோடு, வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், நேற்று கார்த்தியும் சிவகுமாரும் விஜயகாந்த் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து இன்று சூர்யாவும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சூர்யாவுக்காகவே பெரியண்ணா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தவர் விஜயகாந்த். இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடம் சென்ற சூர்யா, அங்கு தேம்பி தேம்பி அழுதபடி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, "அண்ணனைப் போல யாரும் கிடையாது, இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும், நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது" என்றார்.