கன்னடத்தில் 2009ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மூலம் சினிமாவில் முகம் காட்டியவர் ரகுல் ப்ரீத் சிங். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமான அவர், தடையற தாக்க படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இவர் என்னமோ ஏதோ, தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், NGK ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான், ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங். இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இரண்டாண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ராகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி பெப்ரவரி 22ம் திகதி திருமணம் செய்துகொள்ள உள்ளார்களாம். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ம் ஆண்டு முதல் நட்சத்திர ஜோடியின் திருமணமாக ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள ஜாக்கி பக்னானி, தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.