இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜெயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் 2014 சித்தார்த், லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் ப்ரிக்குவல் என கூறப்படுகிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருக்கிறார்கள். கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்திக், அனு இமானுவேல் நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படத்தோடு தீபாவளி ரேஸில் போட்டியிட்டது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்.

வசூல் மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் மாபெரும் ஹிட் அடித்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். அந்த வகையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மற்றும் ஒரு சாதனையை படைத்திருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடக்கவிருக்கக்கூடிய ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது. லைம்லைட் என்ற பிரிவின்கீழ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட போவதை படத்தின் தயாரிப்பு நிறுவனமும் இயக்குனரும் அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

உலக நாடுகளில் பல திரைப்படங்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையாகும். அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் உலக படங்களோடு மோதபோகிறது என்பது படக் குழுவினருக்கு கூடுதல் பெருமையை சேர்த்திருக்கிறது. முன்னதாக இயக்குனர் ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் இதே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. இந்த திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.