சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் சிரஞ்சீவி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி மன்சூர் அலிகானின் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மன்சூர் அலிகான். இதனையடுத்து த்ரிஷாவும் அவரின் மன்னிப்பை ஏற்று பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா, தேசிய மகளிர் அனைய உறுப்பினர், நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். மூவரும் தனக்கு மான நஷ்ட ஈடாக தலா ரூ.1 கோடி வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறார் மன்சூர் அலிகான்.

முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் நடிகை த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பேசியுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார் மன்சூர் அலிகான். இதனால் மறுபடியும் இந்த விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.