தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ், சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். வீட்டுடன் அவரது ஸ்டூடியோவும் பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.

அதில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் வீட்டிலும் வெள்ள நீர் அதிகளவில் சூழ்ந்தது. இதனால் அவரது வீட்டில் இருந்து வேறு யாரும் வெளியேற முடியாமல் திணறி வந்தனர். இதனையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டை சூழ்ந்திருந்த வெள்ள நீர் வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன்படி பம்பு செட் மோட்டார் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் வீட்டிலிருந்து வெள்ளம் வெளியேற்றப்பட்டது.

அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து எஞ்சின் ஆயிலும் லீக்காகியதாக சொல்லப்படுகிறது. வெள்ள நீருடன் கார் எஞ்சின் ஆயிலும் வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவ்வழியே சென்ற பொதுமக்கள் மீது வெள்ள நீர் பட்டதால், அவர்களுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காரின் எஞ்சின் ஆயில் அதிகளவில் லீக்கானது தான் இதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது தான் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.