லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் இப்போது டாப் இயக்குநராக இருக்கிறார்.மாநகரம் படத்தின் மூலம் இண்ட்ரோ ஆன அவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என மொத்தம் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார்.

இந்த சூழலில் அவர் ஜி ஸ்குவாட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை உறியடி விஜயகுமார் இயக்குகிறார். படத்துக்கு ஃபைட் க்ளப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது எதற்காக என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்திருக்கிறார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன். ஐந்து படங்களை இயக்கிவிட்டேன் என்பதற்காக நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவில்லை. எல்லோரின் ஆதரவால்தான் நான் இயக்குநராக ஆனேன். இயக்குநராக வாங்கும் சம்பளமே எனக்கு போதும் என்ற அளவில் இருக்கிறது. அதற்கும் மேலே ஏன் இந்தத் தயாரிப்பு நிறுவனம் என்ற கேள்வி எழலாம்.

2012 -13ல் நான் உள்ளே வந்தபோது ஒரு படத்தை இயக்கினால் அதை தயாரிப்பாளரிடம் போட்டு காண்பித்து அந்தப் படம் அவருக்கு பிடிக்கவேண்டும். நான் முதன்முறையாக களம் என்ற குறும்படத்தை எடுத்தேன். அதை எடுத்தபோது எனது நண்பர்கள்தான் எனக்கு பண உதவி செய்தார்கள். அதன் மூலமாகத்தான் மாநகரம் பட வாய்ப்பு கிடைத்தது. எனக்கு நண்பர்கள் உதவினார்கள். அதேபோல் நானும் நாலு பேருக்கு உதவி செய்யலாம் என நினைக்கிறேன். அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன் என்றார்.