சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்த நாய், ஷீபா இனு. இந்த நாயின் உரிமையாளர், இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் இதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அவை அனைத்தும் இணையதளத்தில் வைரலானது.

மீம்ஸ் கிரியேட்டர்கள், இந்த நாய்க்கு செல்லமாக சீம்ஸ் எனப் பெயரிட்டு காமெடி வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அவை பார்ப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தின. இவ்வாறு சீம்ஸ் நாய் உலகம் முழுவதும் பிரபலமானது.

இந்நிலையில் சீம்ஸூக்கு புற்றுநோய் தாக்கியது. கடந்த வெள்ளிக்கிழமை அதற்கு, தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு சீம்ஸ் கண் விழிக்கவில்லை. பரிசோதித்த டாக்டர்கள், சீம்ஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது சீம்ஸ் ஓனர் மட்டுமல்லாமல் உலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு மீம்ஸ் கிரியேட்டர் உள்பட அனைத்து நெட்டிசன்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

சீம்ஸின் இறப்பு குறித்து அதன் உரிமையாளர்கள் வெளியிட்ட பதிவில், "இந்த பூமியில் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் மிஷனை சீம்ஸ் முடித்துவிட்டது. இப்போது சொர்க்கத்தில் தனது நண்பர்களுடன் அதற்கு பிடித்த உணவு வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்" என பதிவிட்டுள்ளார்.