இந்தியா: தமிழ்நாடு

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி  இன்றுதமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. திமுகவின் மருத்துவரணி, மாணவரணி, இளைஞர் அணி சார்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்னர். மதுரையில் அதிமுக மாநாடு இருப்பதால் அங்கு தவிர மற்ற மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

சென்னையில் நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி, எம்பி தயாநிதிமாறன், எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் முதலில் நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களை போல் முகமூடிகள் செய்யப்பட்டு திமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த முகமூடிகளை அணிந்து கொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு வருகிறார்கள். இறந்த அனிதா முதல் அண்மையில் இறந்த ஜெகதீஸ்வரன் வரை அவர்களுடைய புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்ட ஜோடி தங்கள் திருமணம் முடிந்த கையோடு திமுக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு அனிதாவின் புகைப்படம் அடங்கிய இளைஞரணி சார்பில் தயார் செய்யப்பட்ட பதாகைகளை ஏந்தியுள்ளனர். மேலும் நீட் தேர்வை தடை செய்யுங்கள் என கோஷமிட்டு வருகிறார்கள்.