இந்தியா: தமிழ்நாடு

என்எல்சி விரிவாக்கப் பணிகளுக்காக கடலூரில் விவசாய நிலங்களை அந்த நிறுவனம் கையகப்படுத்தியது. அதிலும் இன்னும் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை அறுவடை செய்யும் வரை காத்திருக்காமல் ஜேசிபி இயந்திரத்தை விட்டு பள்ளம் தோண்டியது.

இதனால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்திய என்எல்சி நிர்வாகத்தை முற்றுகை போராட்டம் நடத்துவதாக நேற்று முன் தினம் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

அதன்படி நேற்றைய தினம் என்எல்சியை முற்றுகையிட பாமக தொண்டர்களுடன் அன்புமணி ராமதாஸ் சென்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸார் வாகனம் வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர் போலீஸாரின் வாகனம் மீது கல்வீசி தாக்கினர்.

இதில் போலீஸார் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் வன்முறை வெடித்ததால் போலீஸார் கலவரக்காரர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைக்க முற்பட்டனர். இதைத் தொடர்ந்து வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் அன்புமணியை வேனில் ஏற்றினர். இதை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தையும் கலைத்த போலீஸார் அன்புமணியை அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர் அரசு பேருந்துகளை கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
 
கடலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அது போல் வெளியூரில் இருந்து கடலூர் வந்த 6 அரசு பேருந்துகளும் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 28 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கல்வீச்சு சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துத் துறை சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு முழுவதும் பேருந்துகள் இயங்கவில்லை.

இந்நிலையில் இன்று நிலைமை கட்டுக்குள் இருப்பதால் இன்று காலை முதல் வழக்கம் போல் இயங்கி வருகிறது. அன்புமணி ராமதாஸ் நேற்று இரவே விடுவிக்கப்பட்டார்.