நைஜீரியாவை சேர்ந்த Tembu Ebere என்ற நபர் கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ஏழு நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் அழுதுள்ளார்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால் ஒரு வாரம் முழுவதும் கண்ணீர் சிந்தும் உலக சாதனை முயற்சியில் இடைவிடாமல் அழ முயன்ற அந்த நபர் தற்காலிகமாக சில நிமிடங்கள் பார்வையை இழந்தார்.

மேலும் இந்த விபரீத முயற்சியைத் தொடர்ந்து, அவர் கடும் தலைவலி, முகம் மற்றும் கண்கள் வீக்கம் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.

சாதனை முயற்சியில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி கூறிய Tembu Ebere, தொடர்ந்து அழுதது தன்னை சுமார் 45 நிமிடங்களுக்கு பகுதியளவு பார்வையற்றவராக மாற்றியதாக தெரிவித்தார். எனது சாதனை முயற்சியை கைவிட தயாராக இல்லாத காரணத்தால், இலக்கை அடைய வியூகம் வகுத்து, என் அழுகையை குறைக்க வேண்டியிருந்தது என்று கூறினார். சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் தனது இலக்கை நோக்கி செல்வதில் உறுதியாக இருந்ததாகவும் கூறினார்.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவரது இந்த முயற்சியை கணக்கில் எடுத்து கொள்ளாது என்பது தான்.

ஏனென்றால் இந்த நைஜீரிய மனிதர் கின்னஸ் உலக சாதனைக்காக அதிகாரப்பூர்வ ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் அப்ளிகேஷன் ப்ராசஸ் என எதையும் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

பொதுவாக அழுவது என்பது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. கண்களில் இருக்கும் அழுக்கு மற்றும் தூசியை அகற்ற கண்ணீர் உதவும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வழியாகவும் கண்ணீர் இருக்கும் அதே நேரம், அதிகமாக அழுவது கண்கள் சிவத்தல், வீக்கம் மற்றும் பார்வை இழப்பு உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.